Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 13 ஜூலை (ஹி.ச.)
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பிளம்பர் தொழிலாளி ஆவுடையப்பன் (37) கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலைக்குச் சென்ற இடத்தில் மாங்காய் பறித்ததை கண்டித்ததில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று காலை நெல்லை டவுன்–சங்கரன்கோவில் சாலையில் உள்ள கோவில் அருகே நடந்து சென்ற ஆவுடையப்பனை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் அன்ஷீல்நாகர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கோட்டையடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற ரஞ்சன் (22) மற்றும் நாராயணன் ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதை கண்டறிந்து கைது செய்தனர்.
விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன்பு ஒரே வீட்டில் பிளம்பிங் பணிக்காக ஆவுடையப்பனும், பெயிண்டிங் பணிக்காக ரஞ்சன் மற்றும் நாராயணனும் சென்றிருந்தபோது, அவர்கள் மாங்காய் பறித்ததை ஆவுடையப்பன் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதாக தெரியவந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆவுடையப்பனை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக ஆவுடையப்பன் வெளியே வரும் நேரத்தை ரஞ்சன், நாராயணன், சுசில் கந்தா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கண்காணித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று ஆவுடையப்பன் தனியாக இருந்ததை சுசில் கந்தாவும், சிறுவனும் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரஞ்சனும் நாராயணனும் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஞ்சன், நாராயணன், சுசில் கந்தா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுசில் கந்தா, நெல்லை மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மாங்காய் பறித்ததை கண்டித்த சம்பவத்தை மனதில் வைத்து, ஒரு மாதமாக திட்டமிட்டு இந்த கொலை நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாராட்டினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam