பழனி முருகன் கோயில் விடுதிகளின் கட்டணம் இருமடங்கு உயர்வு – பக்தர்கள் கடும் அதிர்ச்சி
பழனி, 13 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான விடுதிகளின் தங்கும் கட்டணம் திடீரென இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் இருந்து வ
பழனி முருகன் கோயில் விடுதிகளின் கட்டணம் இருமடங்கு உயர்வு – பக்தர்கள் கடும் அதிர்ச்சி


பழனி, 13 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான விடுதிகளின் தங்கும் கட்டணம் திடீரென இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

அவர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் குறைந்த கட்டணத்தில் விடுதிகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அறைகளுக்கான வாடகை 100% வரை உயர்த்தப்பட்டுள்ளதால், சாமானிய பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள், குடும்பத்துடன் வந்து இரண்டு நாட்கள் தங்கி சுவாமி தரிசனம் செய்வதே பெரும் செலவாக மாறிவிட்டது.

திடீர் கட்டண உயர்வு ஏழை, நடுத்தர பக்தர்களை கடுமையாக பாதிக்கும். கோயில் நிர்வாகம் இது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கவும் இல்லை என வேதனை தெரிவித்தனர்.

கோயில் வட்டாரங்களில் விசாரித்தபோது, விடுதிகளின் பராமரிப்பு செலவு, மின் கட்டணம், துப்புரவு பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், பக்தர்களின் நலன் கருதி பழைய கட்டணத்தையே தொடர வேண்டும் எனவும் பல்வேறு பக்தர் அமைப்புகள் இந்து சமய அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன.

பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கட்டண உயர்வு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரசு உடனடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்பதே பக்தர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b