எழுத்தாளர் பூமணி மறைவு - முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை, 13 ஜூலை (ஹி.ச.) கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரும் சாகித்திய அகாடமி விருதாளருமான பூமணி மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரிசல் நில மக்களின் வாழ்
மு.க.ஸ்டாலின்


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)

கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரும் சாகித்திய அகாடமி விருதாளருமான பூமணி மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கரிசல் நில மக்களின் வாழ்க்கை, சமூகக் கட்டமைப்புகள் மற்றும் வட்டார மொழியின் செழுமையை மிக எளிமையான மொழியில் பதிவு செய்த படைப்பாளராக பூமணி திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். தமிழின் அகராதிகளில் இடம்பெறாத பல வட்டாரச் சொற்கள் அவரது படைப்புகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த 'அஞ்ஞாடி' புதினம் அவரது இலக்கிய ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், 'வெக்கை' நாவல் பின்னர் 'அசுரன்' திரைப்படமாக உருவானதன் மூலம் அவரது படைப்புகள் இளம் தலைமுறையினரிடமும் பரவலாகச் சென்றடைந்ததாகவும் முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார்.

எழுத்தாளராக மட்டுமல்லாமல், 'கருவேலம்பூக்கள்' திரைப்படத்தை எழுதி இயக்கி தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றவர் பூமணி என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், அவரது இலக்கியப் பணியைப் பாராட்டும் வகையில், 2022-ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் பூமணிக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதையும் முன்னாள் முதலமைச்சர் நினைவுகூர்ந்தார்.

இயல்பான நடையில் வீரியமான படைப்புகளை வழங்கி தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான பங்களிப்பைச் செய்த பூமணியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அவரது குடும்பத்தினருக்கும் இலக்கிய உலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P