மாநிலக் கல்லூரி மாணவர் வெட்டப்பட்ட வழக்கில் சக மாணவர் கைது - 'ரூட்டு தல' மோதலா? காதல் பிரச்சனையா? போலீசார் தீவிர விசாரணை
திருவள்ளூர், 13 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் மந்திரம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (19), மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 8-ஆம் தேதி காலை கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள கடைக்கு சென்றபோது, இருசக்கர
Murd


திருவள்ளூர், 13 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் மந்திரம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (19), மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 8-ஆம் தேதி காலை கல்லூரி வளாகத்தின் பின்புறம் உள்ள கடைக்கு சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

குமாரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். காயமடைந்த குமார் தானாகவே ஆட்டோவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

தாக்குதலில் குமாருக்கு இரண்டு கால்களிலும், தலையிலும், இரு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஷாம் சுந்தர் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையின்போது, தனது நண்பர்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது என்றும், போலீசாரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது என்றும் ஷாம் சுந்தர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்கள் கல்லூரி மாணவர்களா அல்லது வெளிநபர்களா என்பதை கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், காயமடைந்த குமார் கும்மிடிப்பூண்டி ரூட்டைச் சேர்ந்தவரும், கைது செய்யப்பட்ட ஷாம் சுந்தர் அரக்கோணம் ரூட்டைச் சேர்ந்தவரும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் 'ரூட்டு தல' மோதல் காரணமாக நடந்ததா அல்லது காதல் பிரச்சனையால் ஏற்பட்டதா என்பது குறித்து மெரினா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ