அசாம் சட்டப்பேரவையில் ரைஜோர் தளம் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடையில் போராட்டம்
அசாம், 13 ஜூலை (ஹி.ச.) அசாம் மாநிலத்தில் செயற்கைக்கோள் நகரத் திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதைத் தொடர்ந்து ஆதித்யா ராபா கைது செய்யப்பட்டார். மேலும் காசிரங்காவில் சொகுசு ஹோட்டல்கள் கட்ட
அசாம் சட்டப்பேரவையில் ரைஜோர் தளம் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடையில் போராட்டம்


அசாம், 13 ஜூலை (ஹி.ச.)

அசாம் மாநிலத்தில் செயற்கைக்கோள் நகரத் திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதைத் தொடர்ந்து ஆதித்யா ராபா கைது செய்யப்பட்டார்.

மேலும் காசிரங்காவில் சொகுசு ஹோட்டல்கள் கட்டுவதற்கு எதிரான போராட்டம் தொடர்பாக போகாகாட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கில் நேற்று பிரணாப் டோலே கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான பிரணாப் டோலே மற்றும் ஆதித்யா ராபா ஆகியோரின் கைதைக் கண்டித்து, ரைஜோர் தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அசாம் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு சட்டை மற்றும் கருப்பு முகக்கவசம் அணிந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கைதுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பவர்களை பா.ஜ.க அரசு குறிவைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

செய்தியாளர்களிடம் பேசிய ரைஜோர் தளம் எம்.எல்.ஏ. அகில் கோகோய் கூறுகையில்,

நேற்று அசாமைச் சேர்ந்த விவசாயத் தலைவர் பிரணாப் டோலே கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பு, பழங்குடியினத் தலைவர் ஆதித்யா ராபாவும் கைது செய்யப்பட்டார். அசாமின் நிலத்தை ராம்தேவ், அதானி, அம்பானி மற்றும் டாடா ஆகியோருக்கு வழங்க முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திட்டமிட்டுள்ளார்.

அசாம் நிலத்திற்கான வலுவான பாதுகாப்பு அரணாக விளங்கும் பழங்குடியினர் பெல்ட் மற்றும் பிளாக் பகுதிகளை பா.ஜ.க அரசு குறிவைத்துள்ளது. இந்த நிலத்தை கைப்பற்றி அதானி, அம்பானி மற்றும் ராம்தேவிடம் ஒப்படைக்கிறது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் ஆதித்யா ராபா மற்றும் பிரணாப் டோலே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழுவதும் கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளோம்.

பூர்வகுடி மக்கள், அசாமிய மக்கள் மற்றும் அசாமில் வாழ்பவர்களின் நிலத்தை பறிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் வாக்குறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b