Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 13 ஜூலை (ஹி.ச.)
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகம் திறந்துவிடாததும், வடகிழக்கு பருவமழையும் பொய்க்கும் என்ற கணிப்பும் காரணமாக, இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சம்பா சாகுபடிக்கும் அதே நிலை உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வழக்கமாக 14 லட்சம் ஏக்கரில் நடைபெறும் சம்பா சாகுபடி, இந்த ஆண்டு 5 முதல் 6 லட்சம் ஏக்கராகக் குறையக்கூடும் என்றும், இதனால் 16 முதல் 17 லட்சம் டன் வரை நெல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதுடன், தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வும் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும் என்றும், சம்பா சாகுபடியை உறுதிப்படுத்த ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அது சாத்தியமாகாத பட்சத்தில், காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குவதுடன், பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி வழங்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam