Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
சென்னை சாலிகிராமத்தில், 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த அரசகுமார், பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், உறுதியளித்தபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராததுடன், பெற்ற பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இதுவரை தமிழகம் முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 59 பள்ளிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் மட்டும் ரூ.7.34 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் பல கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் முக்கிய தொடர்புடைய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அரசகுமாரின் 24 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. மோசடியாகப் பெறப்பட்ட பணத்தின் மூலம் எங்கு, எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதுவரை புகார் அளிக்காத ஏமாந்த பள்ளி நிர்வாகிகளின் விவரங்களையும் சேகரிக்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P