Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 13 ஜூலை (ஹி.ச)
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்த பெற்றோர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலைய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அஞ்சல் நிலைய ஊழியர்களான செல்வநாயகம், குமாரசாமி மற்றும் முகவர் சுப்பிரமணி ஆகிய மூவரிடமும் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதப்பாண்டி அஞ்சல் நிலையத்தில் மட்டுமின்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல அஞ்சல் நிலையங்களிலும் இதேபோன்று பணம் செலுத்திய வாடிக்கையாளர்களிடம் மோசடி நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்வி மற்றும் திருமண செலவுக்காக சிறுக சிறுக சேமித்த பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செல்வமகள் திட்ட கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b