Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 13 ஜூலை (ஹி.ச)
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டு, தலையில் குல்லாய் அணிந்த முகமூடி கொள்ளையர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரே இரவில் தொடர்ச்சியாக பல வீடுகளின் கதவுகளை உடைக்கவும், ஜன்னல் வழியாக உள்ளே நுழையவும் முயற்சித்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்தவர்கள் சத்தம் கேட்டு விழித்துக்கொண்டதால், கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இருப்பினும், ஆட்கள் இருக்கும் வீடுகளையே குறிவைத்து நடந்த இந்த துணிகர முயற்சி, அப்பகுதி முழுவதும் கடும் பீதியை கிளப்பியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கே பொதுமக்கள் அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளதால், காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b