Enter your Email Address to subscribe to our newsletters

ஜெயங்கொண்டம் , 13 ஜூலை (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பொதுமக்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் எதிரொலியாக ஆறு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கிராம மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் மனு அளிக்கும் நிகழ்வுகளுக்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மூடப்பட்ட கடைகளின் விவரப்படி, கல்லாத்தூர் பகுதியில் இரண்டு கடைகளும், தா.பழூர், வாரியங்காவல், கோடாலி மற்றும் வல்லம் ஆகிய ஊர்களில் தலா ஒரு கடை என மொத்தம் ஆறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளால் குடும்ப அமைதி குலைவதாகவும், பள்ளி மாணவர்கள், பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், சாலை விபத்துகள் அதிகரிப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
பல மாதங்களாக நடைபெற்ற அமைதியான போராட்டங்களையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் துறை அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மேலும், மதுவிலக்கை நோக்கிய ஒரு முக்கிய முன்னெடுப்பாக இந்த நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சிகள் நடந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b