Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜூலை (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற சேவை விதிகளின்படி அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு தகுதிகளில் தளர்வு அளிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இருப்பதாகவும், பணியாளர் பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் நியமனம் செய்யப்பட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்த நியமனத்தால் பாதிக்கப்பட்டதாக எந்த தகுதியான நபரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்தது தவறு என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 17 பேரின் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தகுதிக்குறைபாடு மற்றும் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி, 2023-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 17 தனி உதவியாளர்களின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, புதிய தேர்வு நடத்த உத்தரவிட்டிருந்தது.
தற்போது அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P