Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 13 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் ஜி.ஆர்.டி. கார்டன் பகுதியில் பக்கிரிசாமி, வயது 52 வசித்து வந்தார்.
இவர் திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை சுமார் 5 மணியளவில், தனது வீட்டின் அருகே உள்ள ஜி.ஆர்.டி. கார்டனில் இருந்த மா மரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிளை முறிந்ததால், சுமார் 20 அடி உயரத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பக்கிரிசாமிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த அவரது திடீர் மரணம், குடும்பத்தினரையும், சக டாஸ்மாக் ஊழியர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b