Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தச் சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மை கொள்கைக்கும் எதிரானது மட்டுமல்லாமல், மாநில அரசுகளின் அதிகார வரம்பிலும் தலையிடும் நடவடிக்கையாகும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அதுவே தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'வந்தே மாதரம்' பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயப்படுத்துவது தேசிய கீதத்தின் நிலையை மாற்றும் முயற்சியாகக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய 'ஆனந்தமடம்' நாவலில் இடம்பெற்றுள்ள 'வந்தே மாதரம்' பாடலின் பின்னர் வரும் பகுதிகளில் இந்து மதக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால், அனைத்து மதத்தினராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்து சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1937-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்கள், தேசிய ஒற்றுமையைப் பேணும் வகையில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சமரச முடிவை எடுத்ததாகவும், 1950-ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை 'ஜன கண மன' பாடலையே தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகவும் அவர் நினைவூட்டியுள்ளார்.
எனவே, 'வந்தே மாதரம்' பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாகப் பாடச் செய்யும் சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என்றும், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் உரிய முறையில் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ