Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 13 ஜூலை (ஹி.ச.)
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, அமராவதி மேம்பாலம் அருகே உள்ள பூங்காவை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கக் கோரி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாபலிபுரத்தில் தாம் அளித்த பேட்டி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
த.வெ.க.வில் சேர யாரும் தன்னை அழைக்கவில்லை என்றும், அதிமுக தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், கரூரில் உள்ள அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வில் இணையலாம் என்று தன்னிடம் கருத்து தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக 11 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாகவும், அதனால்தான் பல நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்ததாகவும் விளக்கமளித்தார்.
வெண்ணமலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் இனாம் நிலப் பிரச்சினைக்கு, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு சிறப்பு குழு அமைத்து நிரந்தர சட்டரீதியான தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே உண்மை வெளிவரும் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam