Enter your Email Address to subscribe to our newsletters

ஆக்ரா , 13 ஜூலை (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம்
ஆக்ராவின் தஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரா.
இவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இதையடுத்து மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வருவதற்காக ரவீந்திரா, தனது மாமியார் பூல்வதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது பூல்வதி, தனது மகளை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்றால் ரவீந்திராவின் தாயார் ராம்மூர்த்தியை கொலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதற்காக விஷத்தையும் கொடுத்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மனைவி மீதான ஆசையில், மாமியார் கொடுத்த விஷத்தை ரவீந்திரா தனது தாய் சாப்பிடும் உணவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த உணவை சாப்பிட்ட ராம்மூர்த்தி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ராம்மூர்த்தியின் கணவர் அளித்த புகாரின் பேரில் தஜ்கஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாய்க்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக ரவீந்திராவை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்ததாக கூறப்படும் தலைமறைவான பூல்வதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடும்ப சொத்து தொடர்பான தகராறும் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA