Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச)
பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ?
அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ?
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது.
எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b