Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 14 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைக்க முதலமைச்சர் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தனியார் பால் நிறுவனங்களுக்கு போட்டியாக ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தும் வகையில், பால் கொள்முதலை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த சில மாதங்களாக ஆவினில் நிலவி வந்த பால் தட்டுப்பாடு, விநியோக சிக்கல்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இதனிடையே, கால்நடை தீவனம், தொழிலாளர் கூலி உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பால் கொள்முதல் குறைந்ததால், ஆவின் மாநிலம் முழுவதும் தினசரி பால் விநியோகத்தை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கியதால் சில பால் உற்பத்தியாளர்கள் அவற்றை நோக்கி மாறியதும், கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைந்ததும் இதற்கு முக்கிய காரணங்களாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில், பால் கொள்முதலை அதிகரித்தும், உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளித்தும், நுகர்வோருக்கு தடையின்றி பால் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் அரசு விரைவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam