அரசின் அலட்சியத்தால் 6 மீனவர்கள் பலி - ஒய்.எஸ்.ஆர் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
விசாகப்பட்டினம் , 14 ஜூலை (ஹி.ச.) விசாகப்பட்டினம் அருகே ஜப்பர் தோட்டா பகுதியில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த 6 மீனவர்களின் குடும்பத்தினரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், விபத்தில் இருந்து உயிர் தப
A


விசாகப்பட்டினம் , 14 ஜூலை (ஹி.ச.)

விசாகப்பட்டினம் அருகே ஜப்பர் தோட்டா பகுதியில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த 6 மீனவர்களின் குடும்பத்தினரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், விபத்தில் இருந்து உயிர் தப்பிய மீனவர் சின்னாவையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்,

மீனவர்களின் பாதுகாப்பில் ஆந்திர மாநில கூட்டணி அரசு அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

கடந்த 4-ந் தேதி நடந்த படகு விபத்தில் 6 மீனவர்கள் உயிரிழந்ததற்கு அரசின் கவனக்குறைவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

விபத்து நடந்த உடனேயே மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் அரசு உரிய நேரத்தில் செயல்படாததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் ஜெகன் கூறினார்.

கரையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் தான் விபத்து நடந்ததாகவும், சம்பவம் குறித்து அன்று இரவு 10.30 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கடல் காவல் துறை அதிகாரிக்கு தகவல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த நாள் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு படகின் ஊழியர்கள் மீனவர் சின்னாவை மீட்டதால் அவர் உயிர் பிழைத்ததாகவும் ஜெகன் கூறினார்.

அரசு செய்த தவறை மறைக்கவே 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையும் சரியானதாக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு வெறும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது போதாது என்றும், அவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு மாதத்துக்குள் மீனவர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஜெகன் உறுதியளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA