Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 14 ஜூலை (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனை ஜாமின் பெற்றிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆத்தூர் காவல் நிலையத்தில் 10 நாட்கள் கையொப்பமிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை இன்று நிறைவு செய்தார்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, தமிழக வெற்றிக்கழகத்தின் ஆத்தூர் நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 3-ஆம் தேதி ஆத்தூரில் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
அன்றிரவு திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ரூ.10,000 பிணைத்தொகையில் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தொடர்ந்து 10 நாட்கள் காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி, தொடர்ந்து 10 நாட்களும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று 10-வது நாளாக ஆத்தூர் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு நீதிமன்றம் விதித்த நிபந்தனையை நிறைவு செய்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P