Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா , 14 ஜூலை (ஹி.ச.)
பீகார் மாநிலம் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.96 கோடிக்கு மேல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் ரூ.22.19 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.73.87 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் அடங்கும்.
அதே நேரத்தில், அவரது மனைவி ஜான்வி தாஸ் பெயரில் ரூ.89.51 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.12.42 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தாண்டுகிறது.
பிரமாணப் பத்திரத்தில், தனது மீதுள்ள வழக்குகள் குறித்த விவரங்களையும் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ளார்.
அவதூறு, அரசு பணிக்கு இடையூறு செய்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு ரூ.5.77 கோடி வங்கி கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு காசியாபாத்தில் 2 குடியிருப்புகள் உள்ளன. மேலும், 2 குடியிருப்புகளில் 50 சதவீத பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாட்னாவின் பாடலிபுத்திரா காலனி, டெல்லியின் வசந்த் விஹார், பக்சர் மற்றும் சொந்த ஊரிலும் அவருக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி ஜான்வி தாஸ் பெயரில் கவுகாத்தியில் 2 குடியிருப்புகள், ஒரு பங்களாவில் மூன்றில் ஒரு பங்கு உரிமை மற்றும் நொய்டாவில் ஒரு சொத்து இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் உரிமையாளராக உள்ள வேத் வெஞ்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2024-25 நிதியாண்டில் ஜன் சுராஜ் கட்சிக்கு ரூ.85 கோடி நன்கொடை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு சோன்பூரில் உள்ள பாபா ஹரிஹர்நாத் கோவிலில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், இது தனது வேட்புமனு மட்டுமல்ல என்றும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டம் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA