Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
வியட்நாம் நாட்டின் சுற்றுலா தளமான பூ குவாக் தீவு அருகே கடந்த 11 ஆம் தேதி சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட இந்தியாவை சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.
32 இந்தியர்கள் உள்ளிட்ட 36 பேர் பயணம் செய்த படகு திடீரென விபத்துக்குள்ளானதில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்கள் இந்தியா திரும்பினர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர் அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது.
உயிரிழந்த 15 பேரின் உடல்களும் வியட்நாமில் இருந்து நேற்று மும்பைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.
அங்கிருந்து தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
உயிரிழந்தவர்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் குமார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் ஆகியோரது உடல்கள் தனி விமானத்தில் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அரசு மரியாதையுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில், உடல்கள் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
வியட்நாமில் உயிரிழந்த மற்ற தமிழர்களின் உடல்களும் விரைவில் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b