Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சிவா மற்றும் அவரது மனைவி மோனிஷா ஆகியோர், மோனிஷாவின் தம்பியின் மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமியின் மகனுக்கும் இடையே இருந்ததாகக் கூறப்படும் தொடர்பை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி மற்றும் அவரது ஐந்து மகன்கள், நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சிவா, மோனிஷா ஆகியோரை தாக்கியதுடன், அவர்களது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து எரித்ததாகவும், வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, மோனிஷா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் எர்ணாவூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதுகுறித்து புகார் அளித்ததற்கான பழிவாங்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்திலும், அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P