Enter your Email Address to subscribe to our newsletters

மத்திய பிரதேசம், 14 ஜூலை (ஹி.ச.)
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கேஜி முதல் பிஜி வரை இலவச தரமான கல்வி கோரியும், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி இரண்டு நாள் 'ஜென்-இசட் சைக்கிளோதான் யாத்திரை'யை இன்று இந்தூரில் தொடங்கியது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.
இந்தூரில் உள்ள தேவி அகில்யா விஸ்வவித்யாலயாவில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.
நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை முன்னிலைப்படுத்துவதே யாத்திரையின் நோக்கமாகும். பங்கேற்பாளர்கள் ஜூலை 15 அன்று போபாலை சென்றடைந்து, முதல்வர் மோகன் யாதவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து,
செய்தியாளர்களிடம் பேசிய பட்வாரி,
இது ஒரு உறுதிப்பாட்டின் தொடக்கம். இது மாணவர்களின் குரல், இளைஞர்களின் சுயமரியாதை. மத்திய பிரதேசம் கடந்த 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியின் கீழ் உள்ளது. மாநிலத்தில் தேர்வு மாஃபியா, வினாத்தாள் கசிவு மாஃபியா, ஆட்சேர்ப்பு முறைகேடுகள் தலைதூக்கியுள்ளன.
பேராசிரியர்கள் முதல் ஆசிரியர் பணியிடங்கள் வரை கிட்டத்தட்ட 50 சதவீதம் காலியாக உள்ளன. இது அரசியல் பயணம் அல்ல. நாட்டின் எதிர்காலத்தை, மாணவர்களையும் கல்வியையும் காக்கும் பயணம்.
கேஜி முதல் பிஜி வரை தரமான கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும். கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின், ஒவ்வொரு பெற்றோரின் உரிமை. இன்று பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கிறது, ஏழைகள் பின்தங்கி உள்ளனர். சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இது கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது
நீட் தேர்வு முறைகேடுகளாக இருந்தாலும், மற்ற தேர்வுகளாக இருந்தாலும், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து 90 முறை வினாத்தாள் கசிந்துள்ளது, 50 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்வி மாஃபியா வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் அது பாஜகவுடன் தொடர்புடையதாக ஏன் இருக்கிறது? என்பதுதான் இன்று மாநில மக்கள் முன் உள்ள கேள்வி.
ராகுல் காந்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, கல்வியை பாதுகாக்கவும், கல்வி மூலம் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் நாடு முழுவதும் இயக்கத்தை தொடங்கியுள்ளார். நாங்கள் அந்த முயற்சிக்கு பங்களிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b