Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 14 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்து வருவது கல்வித் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சுற்றியுள்ள வேலாம்பூண்டி, எம்.கொல்லப்பட்டி, குள்ளன்தைலி வலசு, வானவராயநல்லூர் மற்றும் சாளரப்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கி வந்த அரசுப் பள்ளிகள் போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தொடர்ந்து சில ஆண்டுகளாக இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதால், கல்வித் துறை விதிமுறைகளின்படி குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை எட்டாத பள்ளிகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தொலைதூரப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் பல மாணவர்கள் இடைநிற்றலுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு மற்றும் உதவித்தொகை போன்ற சலுகைகள் குறித்து பெற்றோர்களிடையே விரிவான பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கினால் மட்டுமே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புறக் கல்வியைப் பாதுகாக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b