Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 14 ஜூலை (ஹி.ச)
ஒதியத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களால் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
இந்தச் சிலை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிலை திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போவதாகவும், இதற்கு சாதிய உணர்வு கொண்ட சிலர் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் தங்களுக்குச் சமமாக நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சில சாதி ஆதிக்க சக்திகள், இந்தச் சிலைக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறுகையில்,
சமூக நீதியின் அடையாளமாக விளங்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை திறக்க விடாமல் தடுக்கும் சாதி வெறியர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் சிலை திறப்பை மேலும் தாமதப்படுத்தினால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரின் சிலை திறப்புக்கே தடை ஏற்படுத்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அமைதியான முறையில் சிலை திறப்பு விழாவை நடத்த உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b