கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு - அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி மற்றும் போக்குவரத்து செலவை நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி மற்றும் போக்குவரத்து செலவை நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து, மற்ற இருவரின் தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆஜராகி வாதாடினார்.

அதற்கான கட்டணத்தை வழங்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கில், உரிய தொகையை வழங்குமாறு ஏற்கனவே தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அப்போது அரசுத் தரப்பில், வழக்கறிஞருக்கான தொழில்முறை கட்டணம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், போக்குவரத்து செலவை வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மிக முக்கியமான வழக்கில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து 117 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாக சுட்டிக்காட்டினர். அந்தப் போக்குவரத்து செலவையும் அவரே ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவுகள் சேர்த்து ரூ.12.10 லட்சத்திற்கான பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையை வழங்காமல் மேல்முறையீட்டுக்காக அரசின் நேரம், சக்தி மற்றும் மக்கள் பணத்தை செலவிடுவதை விட, அந்தத் தொகையை வழங்குவது பொருத்தமானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த அமர்வு, அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா. மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி மற்றும் போக்குவரத்து செலவை நான்கு வாரங்களுக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam