Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 ஜூலை (ஹி.ச.)
பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டமைப்புகளை அகற்றி, டெல்லி முழுவதும் சாலை இணைப்பை மேம்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஆக்ரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி முதல், அதிகாரிகள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட 94 கட்டிடங்களை இடித்துள்ளதோடு, கட்டிட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறிய 114 கட்டிடங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அமலாக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்றைய தேதி முதல் 63 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
ஜூன் 3-ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 22 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
மேலும் 97 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 7-ஆம் தேதி மட்டும் 79 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
டெல்லியின் 13 மாவட்டங்களில் உள்ள 124 இடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சி, டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பிற அரசு அமைப்புகள் இணைந்து இடிப்பு, சீல் வைத்தல் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் தீ பாதுகாப்பு மீறல்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுக்க நீண்டகால அமைப்பை உருவாக்கி வருவதாகவும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளார்.
கட்டிடங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களுக்கான கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தரங்களுடன் இணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.
டெல்லி மேம்பாட்டு ஆணையமும் தனது நிலங்களில் அமலாக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து பெரிய அளவில் மாறுபட்டு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடுமையான விதிமீறல்களுக்குக் காரணமான கட்டிடக் கலைஞர்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.
மேலும், மேம்பாட்டு மற்றும் நில ஒருங்கிணைப்பு மண்டலங்களில் அமலாக்கப் பணிகளைத் தீவிரப்படுத்த பறக்கும் படைகள் மற்றும் விரைவு நடவடிக்கைக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிதம்புரா-ஷாலிமார் பாக் சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக, அரசு நிலத்தில் சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த சட்டவிரோத வழிபாட்டுத் தலத்தை டெல்லி அரசு இன்று இடித்து அகற்றியதாக முதலமைச்சர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்தை சீராக்கும் நோக்கில் நடைபெறும் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அகற்றம் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது.
பிதம்புராவுக்கும் ஷாலிமார் பாக்கிற்கும் இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதே இந்த விரிவாக்கப் பணியின் நோக்கமாகும்.
Hindusthan Samachar / vidya.b