Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, புதிய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (ஜூலை 16 ஆம் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய நலத்திட்ட அறிவிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் பல முக்கிய தொழில்துறை சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் அமைச்சரவை ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
புதிய முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை தொடர்பான கொள்கை முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கும் என்பதால், அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b