Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை விதித்திருந்த தடையை, சுமார் 3,390 பேரின் மனுக்களின் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் நீக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
முன் அனுமதியின்றி கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வழிவகுக்கும் வகையில் இந்த உத்தரவு இருப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் ஒரே நாளில் தடை நீக்க உத்தரவு பிறப்பித்திருப்பது முறைகேடானது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில், 1965–67 ஆம் ஆண்டுகளில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிலங்கள் பலருக்கு மாற்றப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளன. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மனுதாரர்கள் அந்த நிலங்களில் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்ததால், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தடையை நீக்கியதாகவும், இந்த முடிவில் கோவில் நிர்வாகமும் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கை தொடர்பில்லாத மூன்றாம் நபர் தொடர முடியாது என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கோவில் தரப்பில், 50 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்ட செட்டில்மெண்ட் பட்டாக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3,084.95 ஏக்கர் நிலங்கள் தற்போது யாருடைய பெயரில் உள்ளன என்பது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் ஜூலை 29-க்குள் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam