Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 14 ஜூலை (ஹி.ச)
கரூர் மாவட்டத்தில் சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு இருந்த தடையை நீக்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களை தனிநபர்கள் பெயரில் பட்டா செய்ய இந்த உத்தரவு வழிவகை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.
கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசின் உத்தரவு அறநிலையத் துறை சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை முறையான நடைமுறைகளின்படி தாக்கல் செய்யும்பட்சத்தில், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் தரப்பில் முறையான மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனு இன்று(ஜூலை 14) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
ரூ.25,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் தொடர்பான இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விசாரணையில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b