தூத்துக்குடியில் இறைச்சி கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிக் கொலை - தப்பிய இருவருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி, 14 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ் நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (40) மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று (ஜூலை 13) இரவு 9.30 மணி அளவில் மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்க
தூத்துக்குடியில் இறைச்சி கடை உரிமையாளர் அரிவாளால் வெட்டிக் கொலை - தப்பிய இருவருக்கு போலீசார் வலைவீச்சு


தூத்துக்குடி, 14 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடி தாளமுத்துநகர் திரேஸ் நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (40) மாதா நகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார்.

நேற்று (ஜூலை 13) இரவு 9.30 மணி அளவில் மாதா நகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் இருவருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர்.

சேகர் அவர்களை வழிமறித்து, குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து மூவரையும் அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில், தாக்குதலுக்குள்ளான வாலிபர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அங்கு நின்று கொண்டிருந்த சேகரை இருவரும் சேர்ந்து அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 14 ஆம் தேதி) காலை 6 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக் கொலை சம்பவம் குறித்துத் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இரு வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வருகிறார்.

தப்பியோடிய இரண்டு குற்றவாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படுகொலை சம்பவம் தூத்துக்குடி பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b