Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச)
பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை என்றும், அவதூறு பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை சில தனியார் நபர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறைரீதியான நடவடிக்கைகளும், காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், யார் கேட்டாலும் அந்த நிலத்தை பதிவு செய்யக் கூடாது என்று பழனி இணை ஆணையர் சார்பில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ஏற்கனவே பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அமைச்சர் ரமேஷின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சமூக வலைதளப் பக்கங்களும், சில ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அமைச்சரின் உறவினர்கள் என்றும், அமைச்சருக்கு தெரிந்தே இந்த சம்பவம் நடந்ததாகவும் ஆதாரமற்ற தகவல்களை பரப்பி, அமைச்சரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மற்றும் அதனை பகிரும் சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மற்றும் இனிமேலும் அவ்வாறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷின் மக்கள் தொடர்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ