Enter your Email Address to subscribe to our newsletters

நாகர்கோவில், 14 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் பீச் ரோட்டில் அமைந்துள்ள வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில், மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன. தற்போது மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு வரும் நிலையில், மக்காத குப்பைகள் மட்டும் இந்தக் கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை சுமார் 6 மணியளவில் குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி, குப்பைக் கிடங்கின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்ததுடன், கடுமையான துர்நாற்றமும் பரவியதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P