பாண்டி கோவில் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்- உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி
மதுரை, 14 ஜூலை (ஹி.ச.) மதுரை பாண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மது
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 14 ஜூலை (ஹி.ச.)

மதுரை பாண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மனுதாரர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் முருக கணேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரவு, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோவில் நடை சாத்தப்பட்ட பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதி பெற்றதாகவும், கோவில் பணியாளர் கருவறையைத் திறந்து தரிசனம் செய்ய அனுமதித்தது ஆகம விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான ஜூன் 28-ஆம் தேதியிலான சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, பாண்டி கோவிலில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்து சாமி தரிசனம் செய்ததில் என்ன தவறு? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இது போன்ற மனுக்களைத் தொடர்ந்தால் மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஆகம விதிகள் மீறப்பட்டதாகக் கூறியே சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கக் கோருவதாக விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இரவு 9 மணிக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ததால் ஒன்றும் ஆகிவிடாது. மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்; இல்லையெனில் அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதி மீண்டும் எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் மனு திரும்பப் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam