Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 14 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரையைச் சேர்ந்த வல்லரசு (26) கட்டிடத் தொழிலாளி.
இவரது மனைவி ஸ்ரீபிரியா (22) கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு மைவிழி (4½), தர்ஷன் (1½) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஸ்ரீபிரியா, தனது தாய் வெண்ணிலாவின் வீட்டான மேட்டூர் ராஜகணபதி நகரில் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல நேற்று வல்லரசு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று இரவு, இரண்டு குழந்தைகளுடன் தனி அறையில் வல்லரசு தூங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இன்று காலை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால், ஸ்ரீபிரியா மற்றும் அவரது தாயார் வெண்ணிலா கதவைத் தட்டியுள்ளனர்.
பதில் வராததால், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, இரண்டு குழந்தைகளும் துப்பட்டாவில் வீட்டின் இரும்புச் சட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.
அதே அறையில் வல்லரசு, மனைவியின் சேலையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
முதற்கட்ட விசாரணையில், வல்லரசு முதலில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார், மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P