Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 14 ஜூலை (ஹி.ச.)
குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'வெங்கட்ராமைய்யா காரி தாலூகா' திரைப்படத்தில் தினேஷ் குமார் கதாநாயகனாகவும், ஈ.டி.வி. பிரபாகரின் மகள் திவிஜா பிரபாகர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சதீஷ் ஆவாலா இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழாவில் தெலங்கானா ரக்ஷண சேனா தலைவர் கல்வகுண்ட்லா கவிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறிய திரைப்பட தயாரிப்பாளர்கள்தான் திரையுலகின் முதுகெலும்பு. அவர்கள் வளர்ந்தால்தான் திரைப்படத் துறையும் வளர்ச்சி அடையும். எனவே சிறிய தயாரிப்பாளர்களுக்கு எங்கள் கட்சி எப்போதும் துணையாக இருக்கும்.
எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தால், சிறிய திரைப்படங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய திரைப்படக் கொள்கையை கொண்டு வருவோம்.
இசையமைப்பாளர் சரண் அர்ஜுன் திறமையானவர். அவர் இசையமைத்த 'மூன்று நிறக் கொடி' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலால்தான் ஒருவர் முதல்வரானார்.
அதனால்தான் சரண் அர்ஜுன் மீது எனக்கு கொஞ்சம் கோபமும், செல்ல அலுக்கும் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினார். அதேபோல், இந்தப் படத்தின் பாடல்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள 'தாலூகா' என்ற சொல் தெலங்கானாவில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.
இருப்பினும் மாநிலங்கள் பிரிந்திருந்தாலும் தெலுங்கு மக்கள் அனைவரும் ஒன்றுதான்.
இரு மாநில மக்களும் ஒருவரின் கலாசாரத்தை மற்றொருவர் மதிக்க வேண்டும்.
தெலுங்கு திரையுலகம் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக திகழ வேண்டும் என்றார்.
மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருப்பதைப் போன்று சிறிய தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்குகளுக்கு தெலங்கானாவில் போதிய அரசின் ஊக்குவிப்பு இல்லை என்றும், ஓ.டி.டி. தளங்களின் வருகையால் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தாலும், அவையும் வணிக நோக்கத்திலேயே செயல்படுவதால் சிறிய தயாரிப்பாளர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA