Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 14 ஜூலை (ஹி.ச.)
ஒவைசி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் குளம் ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறி காங்கிரஸ் அரசு மக்களை நம்ப வைக்க முயற்சி செய்து வருவதாக மத்திய மந்திரி பண்டி சஞ்சய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒவைசி கல்லூரி அமைந்துள்ள பகுதி குளத்தின் எல்லைக்குள் இல்லை என்று கூறி காங்கிரஸ் அரசு உண்மையை மறைக்க முயற்சி செய்கிறது.
ஏழை மக்களின் வீடுகளை இடிப்பதில் காட்டும் ஆர்வத்தை, கண்முன்னே தெரியும் பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் மீது ஏன் காட்டவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசுக்கு உண்மையிலேயே பார்வை இல்லையா? அல்லது மஜ்லிஸ் கட்சியுடனான அரசியல் தொடர்பு காரணமாக நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர்களின் பார்வை குறைபாட்டை சரி செய்யும் வகையில் பா.ஜனதா தொண்டர்கள் இலவச கண் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று கூறிய பண்டி சஞ்சய், பரிசோதனைக்கு பிறகும் அங்கு குளம் ஆக்கிரமிப்பு தெரியவில்லை என்றால் அது பார்வை குறைபாடு அல்ல; அரசியல் குறைபாடு என்று விமர்சித்தார்.
மேலும், வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ப குளங்களின் FTL (முழு நீர்மட்ட எல்லை) வரம்புகளை அரசு மாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசு, நடைமுறையில் ஏழைகளுக்கு ஒரு விதமாகவும், ஆளும் தரப்புக்கு நெருக்கமானவர்களுக்கு வேறு விதமாகவும் செயல்படுவதாக பண்டி சஞ்சய் கூறினார்.
பிடித்தவர்களை பாதுகாத்து, பிடிக்காதவர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
குளங்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு, அனைவருக்கும் ஒரே விதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பண்டி சஞ்சய் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA