தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - ₹755.83 கோடியில் 441 கிலோ தங்கம் கொள் முதல் செய்ய டெண்டர்
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) சார்பில் தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 த
Ring


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசின் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) சார்பில் தங்கம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் ₹755.83 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மோதிரங்கள் அனைத்தும் 22 கேரட் தரத்திலும், 916 ஹால்மார்க் சான்றிதழுடன் இருக்க வேண்டும் என டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக சுமார் 441 கிலோ தங்கம் இந்தத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட உள்ளது.

கொள்முதல் செய்யப்படும் தங்கம் மற்றும் தயாரிக்கப்படும் மோதிரங்கள் தரச் சான்றுகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது டெண்டர் கோரும் பணிகள் தொடங்கியுள்ளதால், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான கொள்முதல் மற்றும் விநியோக நடைமுறைகள் அரசின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ