Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம்
காரனோடையில் உள்ள சிவகிரி என்பவரின் மளிகைக் கடைக்கு சென்ற ஒருவர், தன்னை திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பழனிவேல் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கடையின் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வுக்காக கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் ஹேமநாதன், சம்பவம் குறித்து உண்மையான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் அங்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மகேஷ்வரி, அந்த நபரிடம் இருந்த அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அரசு அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து போலி அடையாள அட்டையை பயன்படுத்தியதாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனிவேலை கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இதேபோன்று அரசு அதிகாரியாக நடித்து சென்னை பூக்கடை மற்றும் விழுப்புரம் பகுதிகளிலும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ