வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பியது எப்படி? -சென்னை திரும்பிய நிர்மல் குமார் பேட்டி
சென்னை, 14 ஜூலை (ஹி.ச.) வியட்நாமில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த நிர்மல் குமார், கொழும்பு வழியாக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண
Vietnam


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)

வியட்நாமில் நிகழ்ந்த கோர படகு விபத்தில் உயிர் தப்பிய திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த நிர்மல் குமார், கொழும்பு வழியாக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன், ஆறுதல் கூறி வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், வியட்நாமில் நடந்த அந்த நடுக்கடல் துயர சம்பவத்தையும், அதிலிருந்து தான் எப்படி உயிர் தப்பினேன் என்பதையும் பதைபதைப்புடன் விவரித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

நாங்கள் கடந்த ஜூலை 8 ஆம் தேதி சுற்றுலாப் பயணத்தைத் தொடங்கினோம்.

ஜூலை 11 அன்று வியட்நாமின் பூ குவக் தீவு அருகே ஒரு அதிவேகப் படகில் பயணம் செய்தோம்.

ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு மதிய உணவிற்காக சென்று கொண்டிருந்தோம். அந்த பெரிய படகில் மொத்தம் 32-க்கும் மேற்பட்டோர் இருந்தோம்.

நாங்கள் கரையில் இருந்து புறப்பட்டு சுமார் 300 மீட்டர் தூரம் கடந்து சென்ற போது, கடலில் திடீரென மிகக் கடுமையான புயல் காற்றுடன் கூடிய ராட்சத அலை படகை தாக்கியது.

இதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்தது.

அப்போது இடதுபுறம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் நிலைதடுமாறி வலதுபுறம் நோக்கிச் சரிந்து விழுந்தனர்.

இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் படகு தலைகீழாக கவிழ்ந்தது என்றார்,

தொடர்ந்து பேசிய அவர்,

நாங்கள் படகின் முன்பகுதியில் அமர்ந்திருந்ததால், விபத்து நடந்தவுடன் உடனடியாகக் கடலில் குதித்து தப்பிக்க முயன்றோம்.

கடலில் குதித்த எங்களை போன்ற 15 பேரால் மட்டுமே உடனடியாகப் படகை விட்டு வெளியே வர முடிந்தது.

ஆனால், மற்றவர்கள் படகிற்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்து கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், சுமார் 10 நிமிடங்களில் மீட்புக் குழுவினர் அங்கு வந்தனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த எங்களை அவர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

எங்களை மீட்டதற்குப் பிறகு, தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும் தொடர்ந்து கண்காணித்து மிகச் சிறப்பாகச் செய்து கொடுத்தன என்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த நிர்மல்குமார் மற்றும் அவரது நண்பர் முருகபிரபு ஆகியோர் பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் விநியோகிஸ்தர்களாக உள்ளனர்.

சிறப்பான விற்பனைக்காக, இவர்களை வியட்நாம் நாட்டிற்கு அந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் சுற்றுலா அழைத்துச் சென்ற போது தான் இந்த விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் முருகபிரபு உள்ளிட்ட 10 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், நிர்மல்குமார் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

விமானம் மூலம் சென்னை வந்த அவர், பின்னர் கார் மூலம் தனது சொந்த ஊரான பழநிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / ANANDHAN