ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 300 கன அடியாக சரிவு – சுற்றுலாப் பயணிகள் கவலை
தருமபுரி, 14 ஜூலை (ஹி.ச.) தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆற்றில் வந்துகொண்டிருந்த நீர்வரத்து 500 கன அடியிலிருந்து மேலும் குறைந்து 300
Water inflow in the Hogenakkal


தருமபுரி, 14 ஜூலை (ஹி.ச.)

தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆற்றில் வந்துகொண்டிருந்த நீர்வரத்து 500 கன அடியிலிருந்து மேலும் குறைந்து 300 கன அடியாகப் பதிவாகியுள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகவே நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், இன்று காலை மேலும் 200 கன அடி சரிந்துள்ளது.

நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் முக்கிய அருவியில் நீரின் சீற்றம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் பரிசல் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பரிசல் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விடுமுறை நாளையொட்டி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நீர்வரத்து தொடர்ந்து குறைந்தால் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் சிக்கல் ஏற்படலாம் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீர்வளத்துறையினர் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b