Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 14 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி வனஜா (வயது 55) வீட்டில் இட்லி மாவு விற்பனை செய்து வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், ராதாகிருஷ்ணன் மற்றும் வனஜா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று காலை ராதாகிருஷ்ணன் வழக்கம்போல் தனது மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வனஜா, கடைக்கு சென்று கணவருக்கு டீ கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். மதிய உணவு இடைவேளையின்போது ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டை திறந்து உள்ளே சென்றபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்து, திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இட்லி மாவு வாங்குவது போல் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனஜாவை கழுத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
பின்னர், வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை தற்போது கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நகைக்காகவே இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து பழவேற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b