ரூ.100 கோடி மதிப்பிலான பழனி திருமடத்து நிலம் முறைகேடு - சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல், 15 ஜூலை (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான திருமடத்து நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், இணை
பழனி


திண்டுக்கல், 15 ஜூலை (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான திருமடத்து நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் முறைகேடாக கிரயம் செய்யப்பட்டதாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பழனி இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல், ஏமாற்றி சொத்துகளை முறைகேடாக அபகரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த திருமடத்தின் சொத்துகள் பழனி கோயில் இணை ஆணையரின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன.

வருவாய்த் துறை ஆவணங்களிலும் 'அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம்' பெயரிலேயே பட்டா உள்ளது.

தற்போது முருக பக்தர்களின் இலவச வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்படும் இந்த நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தில் எவ்வித பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என்று திருமடத் தக்கார் சார்பில் கடந்த 2-ஆம் தேதியே சார்பதிவாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதையும் மீறி பதிவு நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam