Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து மற்றும் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்த தலைவர் காமராசர் என்றும், பசியில்லாத தமிழ்நாட்டை உருவாக்க நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் வேளாண் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்கி கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதுடன், தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கி பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர் காமராசர் என குறிப்பிட்டுள்ளார்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்கியதே காமராசரின் மிகப்பெரிய சாதனை என்றும், அதனால் தான் இன்றளவும் மக்கள் அவரை நன்றியுடன் நினைவு கூருகின்றனர் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காமராசர் உருவாக்கி வளர்த்த அரசு பள்ளிகளும், வேளாண் துறையும் தற்போது நலிவடைந்து வருவதாகக் கூறியுள்ள அவர், அவற்றுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதே காமராசருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றும், அந்த இலக்கை நோக்கி அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ