Enter your Email Address to subscribe to our newsletters

கடப்பா , 15 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தால்மியா பாரத் சிமெண்டு நிறுவனம் தனது ஆலையை ரூ.3,100 கோடி முதலீட்டில் விரிவுபடுத்துகிறது.
இதற்கான 2-வது உற்பத்தி வரிசை (லைன்-2) விரிவாக்கப் பணிகளுக்கு மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தால்மியா பாரத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான புனீத் தால்மியா மற்றும் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்ததும் ஆலையின் சிமெண்டு உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 3.6 மில்லியன் டன்னில் இருந்து 9.6 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். அதேபோல் கிளிங்கர் உற்பத்தித் திறன் 2.5 மில்லியன் டன்னில் இருந்து 6.1 மில்லியன் டன்னாக உயரும். இதன் மூலம் தற்போதைய உற்பத்தித் திறனை விட சுமார் 3 மடங்கு வளர்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நேரடியாக சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மறைமுகமாக பலருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பு அமைச்சர் நாரா லோகேஷ், ஆலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன ரோபோ ஆய்வகம் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து புகைப்படக் கண்காட்சி மற்றும் ஒலி-ஒளி விளக்கக் காட்சியையும் பார்வையிட்டார்.
பின்னர் புனீத் தால்மியாவுடன் இணைந்து பூமி பூஜை செய்து, ஆலையின் விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பரத், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். சவிதா, ஜம்மலமடுகு தொகுதி எம்.எல்.ஏ. சி. ஆதிநாராயண ரெட்டி, கடப்பா தொகுதி எம்.எல்.ஏ. ரெட்டப்பகாரி மாதவி ரெட்டி, மேலவை உறுப்பினர் பூமிரெட்டி ராமகோபால் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் டாக்டர் ஸ்ரீதர் செருகூரி மற்றும் தால்மியா பாரத் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர்.
இந்த மிகப்பெரிய முதலீட்டுத் திட்டம் மூலம் கடப்பா மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA