தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அரசு அனுமதி உள்ளதா? – அரசிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரை, 15 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகளை ஒழுங்குபடுத்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் பைக் டாக்ஸிகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசிடம் கே
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 15 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகளை ஒழுங்குபடுத்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் பைக் டாக்ஸிகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த நவீன்குமார் தாக்கல் செய்த மனுவில், பைக் டாக்ஸி சேவைக்கு சட்டபூர்வ விதிமுறைகள் உருவாக்கவும், மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து உரிமம் வழங்கவும் உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒருங்கிணைப்பாளர்களுக்கான விதிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஆறு மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இதற்கு மனுதாரர் தரப்பில், பைக் டாக்ஸி நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து, பைக் டாக்ஸிகளை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam