Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
காமராஜர் ஏழை மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதால், இன்றும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர் என அவர் புகழாரம் சூட்டினார்.
அதனைத் தொடர்ந்து, லாக்கப் மரணம் தொடர்பாக பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போதைப்பொருள் வைத்திருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விடுவிக்கிறது.
ஆனால் நாகர்கோவிலில் ஒருவரை அடித்தே கொன்றுள்ளனர். இதுவரை முதல்வர் விஜய் எந்த பிரச்சினை குறித்தும் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை என விமர்சித்தார்.
அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அரசு இயங்குகிறதா என்பதே தெரியவில்லை.
அதிகாரிகள்தான் ஆட்சியை நடத்துகின்றனர். சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் பல இடங்களில் தொடங்கப்படவில்லை. மழைக்காலம் நெருங்கியும் டெண்டர்கள் கூட முழுமையாக வழங்கப்படவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் தவெக அரசு எப்போது விழித்துக் கொள்ளும் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது என்றார்.
அத்துடன், கடும் வெயிலால் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
தமிழக மக்களின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ