Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜூலை (ஹி.ச.)
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு என எந்த நிலையிலாவது சிவில் சர்வீசஸ் தேர்வில் தோன்றிய எவரும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு உதவியாளராக செயல்பட யுபிஎஸ்சி அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு உதவியாளராக தற்போது அல்லது முன்பு சிவில் சர்வீசஸ் தேர்வர்களுக்கு கற்பித்தல் அல்லது பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவியாளரும் தாம் யுபிஎஸ்சி தேர்வில் தோன்றவில்லை, தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை என்று உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் என்றும், தவறான தகவல் அளித்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த பொதுநல மனு வலியுறுத்துகிறது.
தற்போது பார்வையற்றோர், குறைந்த பார்வைத்திறன் கொண்டோர், இயக்கக் குறைபாடு மற்றும் பெருமூளை வாதம் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்கள் உதவியாளர்களை பயன்படுத்த யுபிஎஸ்சி அனுமதிக்கிறது.
உதவியாளரின் கல்வித் தகுதி தேர்வுக்கு தேவையான குறைந்தபட்ச தகுதியை விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் மட்டுமே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகுதி நிபந்தனை, ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதிய பட்டதாரிகள் மற்றும் யுபிஎஸ்சி பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் உதவியாளர்களாக தகுதி பெற வழிவகுப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்வு குறித்த தங்களது பரிச்சயம் காரணமாக இத்தகைய நபர்கள் விடைகளின் உள்ளடக்கம், கட்டமைப்பு மற்றும் தரத்தில் தாக்கம் செலுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தனிப்பட்ட உதவியாளர்களை பயன்படுத்துவதை தாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்றும், முன்னாள் யுபிஎஸ்சி தேர்வர்கள் அல்லது பயிற்சி ஆசிரியர்கள் போன்ற போட்டி முரண்பாடு கொண்ட உதவியாளர்களை மட்டுமே தடுக்க விரும்புவதாகவும், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அணுகல் தேவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தீப்ஸ்தம்ப் பவுண்டேஷன் கடந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி யுபிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்திருந்தது.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த பொதுநல வழக்கின் இன்றைய விசாரணையின் போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் அமைப்பான தீப்ஸ்தம்ப் பவுண்டேஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் பஜாஜின் ஆரம்ப வாதங்களை கேட்ட பின்னர் இந்த நோட்டீஸை பிறப்பித்தது.
மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உதவியாளர்களை பயன்படுத்துவதற்கான உரிமையை தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய யுபிஎஸ்சி விதிமுறைகளின்படி, ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதியவர்கள் அல்லது தேர்வர்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் உதவியாளர்களாக செயல்பட அனுமதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்வு முறை, விடை எழுதும் நுட்பங்கள் மற்றும் மதிப்பீட்டு தரநிலைகள் குறித்த சிறப்பு அறிவை பெற்றிருக்கும் இத்தகைய நபர்கள் உதவியாளர்களாக செயல்படுவது, போட்டி முரண்பாட்டை உருவாக்கி தேர்வின் நேர்மையை பாதிக்கும் என்று அவர் வாதிட்டார்.
Hindusthan Samachar / vidya.b