Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பணியாற்றிய எ.வ. வேலு. அந்தக் கால கட்டத்தில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டும் எந்த இடத்திலும் பணிகளே நடைபெறாத நிலையில், முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
அப்புகாரின் அடிப்படையில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து எ.வ.வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஜூலை 9-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஜூலை 28-ம் தேதி வரை அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால பாதுகாப்பு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முறையிட்டதை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b