மேகதாது அணை விவகாரம் எதிரொலி - ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்
ஓசூர், 15 ஜூலை (ஹி.ச.) காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் புதிதாக அம
மேகதாது அணை விவகாரம் எதிரொலி - ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்


ஓசூர், 15 ஜூலை (ஹி.ச.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசும், சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தமிழக - கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணையை விரைந்து கட்ட வலியுறுத்தி, கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் தமிழக - கர்நாடக எல்லையான ஓசூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பகுதியில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் மாறி மாறி போராட்டங்கள் நடைபெற்றதால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லையைத் தாண்டி கர்நாடகாவிற்குள் பேருந்துகள் அனுப்பப்படவில்லை.

அதேபோல், கர்நாடக மாநில பேருந்துகளும் வழக்கம் போல் ஓசூர் வரை வந்து செல்கின்றன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இரு மாநில எல்லைகளிலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடைபெறும் கன்னட அமைப்பின் போராட்டம் முடிந்து நிலைமை சீரானவுடன், தமிழக பேருந்துகள் அம்மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b